51 மீனவர்களையும் ,114 படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் ; பிரதமருக்கு முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கடிதம்

51 மீனவர்களையும் ,114 படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் ; பிரதமருக்கு முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கடிதம்

வியாழக்கிழமை , டிசம்பர் 22, 2016,

இலங்கையின் பிடியில் உள்ள தமிழக மீனவர்கள் 51 பேர் மற்றும் 114 படகுகளை விடுவிக்க பிரதமர் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக பிரதமர் மோடிக்கு அவர் நேற்று எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:

ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் மீன்பிடி தளத்தில் இருந்து இயந்திரப்படகில் 5 மீனவர்களும் நாட்டுப்படகில் 7 மீனவர்களும் மீன்பிடிக்கச் சென்றனர். அவர்களை 21-ம் தேதி அதிகாலை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். அதேபோல, ராமநாதபுரம் மண்டபத்தில் இருந்து 2 இயந்திர படகுகளில் 12 மீனவர்கள், புதுக்கோட்டை ஜெகதாபட்டினத்தில் இருந்து ஒரு படகில் சென்ற 5 மீனவர்களும் 21-ம் தேதி மாலை கைது செய்யப்பட்டர்.

மீனவர்களையும் படகுகளை யும் இலங்கையின் மன்னார் மற்றும் காங்கேசன் துறைக்கு கொண்டு சென்றுள்ளனர். மீன வர்கள் சிறையில் அடைக்கப் பட்டனர்.

பாக் நீரிணையில் மீன்பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதும், தாக்கப்படுவதும் தொடர்கிறது. இது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். மீனவர்களை அமைதி யான முறையில் மீன்பிடிக்க அனுமதிக்க வேண்டும்.

உச்ச நீதிமன்றத்தில் வழக்கு இருக்கும் நிலையில், இந்திய – இலங்கை இடையிலான சர்வ தேச கடல் எல்லையை முடிந்து விட்ட ஒன்றாக கருதக்கூடாது என்பதுதான் தமிழகத்தின் நிலைப் பாடு.

ஆயிரக்கணக்கான தமிழக மீனவர்களின் வாழ்வாதார விஷயத்தில் தாங்கள் நேரடியாக தலையிட வேண்டும் என மீனவர்கள் எதிர்பார்க்கின்றனர். இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை கைது செய்வது அதிகரித்துள்ளதால் தமிழக அரசு மிகுந்த கவலை கொண்டுள்ளது.

எனவே, இந்த விஷயத்தில் தாங்கள் உடனடியாக தலையிட்டு உயர்மட்ட அளவில் பேசி நீண்டநாள் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும். இந்த விஷயத்தில் மத்திய அரசு முக்கியத்துவம் கருதி நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், தற்போது இலங்கை வசம் உள்ள 51 மீனவர்கள் மற்றும் 114 மீன்பிடி படகுகளை காலதாமதமின்றி விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு  தமிழக முதல்வர் ஒ.பன்னீர் செல்வம் நேற்று பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளார்.