6 அம்மா மருந்தகங்கள், 13 பசுமைக் கடைகள் உட்பட மொத்தம் 88 கோடியே 12 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான திட்டங்கள் : முதலமைச்சர் ஜெயலலிதா துவக்கி வைத்தார்

6 அம்மா மருந்தகங்கள், 13 பசுமைக் கடைகள் உட்பட மொத்தம் 88 கோடியே 12 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான திட்டங்கள் : முதலமைச்சர் ஜெயலலிதா துவக்கி வைத்தார்

ஞாயிறு, ஜனவரி 17,2016,

முதலமைச்சர் ஜெயலலிதா தலைமைச் செயலகத்தில், கூட்டுறவுத்துறை சார்பில் கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கியின் காடம்பாடி கிளைக்கு 54 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள அலுவலகக் கட்டடத்தை காணொலி காட்சி மூலம் திறந்துவைத்தார். மேலும். 86 கோடியே 87 லட்சத்து 79 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கூட்டுறவு சங்கங்களின் அலுவலகக் கட்டடங்கள், சேமிப்புக் கிடங்குகள், அம்மா மருந்தகங்கள் உள்ளிட்ட பல்வேறு கட்டடங்களை திறந்து வைத்ததோடு, மதுரை, புதுக்கோட்டை, பெரம்பலூர் மற்றும் கடலூர் மாவட்ட கூட்டுறவு ஒன்றியங்களுக்கு 27 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் செலவில் வாங்கப்பட்ட 4 புதிய விளம்பரம் மற்றும் பிரச்சார வாகனங்கள் மற்றும் 43 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கியில் கைப்பேசி, வங்கியியல் சேவை ஆகியவற்றையும் முதலமைச்சர் துவக்கி வைத்தார்.

கூட்டுறவுத்துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் கூட்டுறவுச் சங்கங்களின் சேவைகளை மேம்படுத்திடும் வகையில், கூட்டுறவுச் சங்கங்களில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், ஏழை, எளிய கிராம மக்களின் வசிப்பிடத்திற்கு அருகிலேயே வணிக வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகளுக்கு இணையான சேவைகளைப் பெற்றிட புதிய கூட்டுறவு வங்கிக் கிளைகள் துவங்குதல், அறுவடைக் காலங்களில் வேளாண் பொருள்களை குறைந்த விலையில் விவசாயிகள் விற்பனை செய்வதைத் தவிர்த்து கிடங்குகளில் இருப்பு வைத்து, நல்ல விலை வரும்போது விற்பனை செய்ய ஏதுவாக சேமிப்புக் கிடங்குகள் கட்டுதல் உள்ளிட்ட பல்வேறு சிறப்புத் திட்டங்களை முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அரசு செயல்படுத்தி வருகிறது.

அந்த வகையில், நாகப்பட்டினம் மாவட்டம், கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கியின் காடம்பாடி கிளைக்கு 2,846 சதுரஅடி கட்டட பரப்பளவில், தரை மற்றும் முதல் தளத்துடன் 54 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அலுவலகக் கட்டடத்தை முதலமைச்சர் ஜெயலலிதா காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார்.

மேலும், தமிழ்நாட்டின் 21 மாவட்டங்களில் உள்ள கூட்டுறவுச் சங்கங்களில் 29 கோடியே 86 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 33,500 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட 168 சேமிப்புக் கிடங்குகள்; தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை இணையத்தின் கோவில்பட்டி, உடுமலைப்பேட்டை மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய இடங்களில் 1 கோடியே 77 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள தலா ஆயிரம் மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட 3 சேமிப்புக் கிடங்குகள்;

நகர்புறம் மற்றும் கிராமப் புறங்களில் செயல்பட்டுவரும் கூட்டுறவு வங்கிகள், வணிக வங்கிகளுக்கு இணையாக மேம்படுத்தப்பட்ட அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளுடன் சிறந்த சேவையினை வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் வகையில் 4 கோடியே 32 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் நவீனமயமாக்கப்பட்ட சேலம், காஞ்சிபுரம், புதுக்கோட்டை, தூத்துக்குடி, இராமநாதபுரம் மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கிகளின் 34 கிளைகள்; 3 கோடியே 71 லட்சத்து 92 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் நவீனமயமாக்கப்பட்ட 8 நகரக் கூட்டுறவு வங்கிகளின் கிளைகள், 3 நகரக் கூட்டுறவுக் கடன் சங்கங்கள் மற்றும் 31 தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்கள்;

இராஜபாளையம் நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலையில் 11 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நவீனமயமாக்கப்பட்ட சுயசேவைப்பிரிவு; கூட்டுறவுச் சங்கங்களின் சேவைகளை மேம்படுத்திடும் வகையில் 3 கோடியே 25 லட்சத்து 24 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சென்னை மத்திய கூட்டுறவு வங்கியின் ஆர்.வி.நகர், அண்ணா நகர் மற்றும் ஆதம்பாக்கம் கிளைகள், காஞ்சிபுரம் மத்தியக் கூட்டுறவு வங்கியின் முகப்பேர் கிளை, சிவகங்கை மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியின் ராம் நகர் மற்றும் கண்டரமாணிக்கம் கிளை ஆகிய 6 கிளைகளுக்கான கட்டடங்கள் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டம், வளர்புரம் நகரக் கூட்டுறவுக் கடன் சங்கத்தின் அலுவலகக் கட்டடம்;

ஒருங்கிணைந்த கூட்டுறவு வளர்ச்சித் திட்டத்தின் கீழ், நாகப்பட்டினம் மாவட்டம் – கூத்தூர் மற்றும் கீழையூர் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு 31 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அலுவலகக் கட்டடங்கள், திண்டுக்கல் மாவட்டம் – வத்தலக்குண்டு கூட்டுறவு பண்டகசாலையில் 17 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சில்லறை விற்பனை நிலையம், விதை விற்பனை மையம் உள்ளிட்ட ஒருங்கிணைந்த அலுவலகக் கட்டடம்;

திருவண்ணாமலை மாவட்ட கூட்டுறவு சங்கத்தில் 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அச்சகக் கட்டடம்; கோயம்புத்தூர் மாவட்டம் – காரமடை, திருவண்ணாமலை மாவட்டம் – திருவண்ணாமலை மற்றும் செங்கம் கூட்டுறவு விற்பனைச் சங்கங்களில் 1 கோடியே 9 லட்சத்து 55 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அலுவலகக் கட்டடங்கள்;

சென்னை – கில்நகர், விழுப்புரம் மாவட்டம் – வல்லம், கண்டாச்சிபுரம், பகண்டை, கூட்டேரிப்பட்டு, திருவக்கரை மற்றும் கோட்டகுப்பம், சேலம் மாவட்டம் – குருசாமிபாளையம், கன்னங்குறிச்சி, அம்மாப்பேட்டை மற்றும் கருமந்துறை, தூத்துக்குடி மாவட்டம் – பேய்குளம், கோயம்புத்தூர் மாவட்டம் – சுல்தான்பேட்டை, நல்லூர் மற்றும் அனுப்பர்பாளையம், ஈரோடு மாவட்டம் – சூரம்பட்டிவலசு மற்றும் மாணிக்கம்பாளையம் ஆகிய இடங்களில் 1 கோடியே 73 லட்சத்து 94 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளின் 17 புதிய கிளைகள்;

குறைந்த விலையில் தரமான காய்கறிகளை நுகர்வோர்கள் பெற்றிடும் வகையிலும், விவசாயிகளும், நுகர்வோர்களும் பயனடையும் வகையில் இடைத்தரகர்களின்றி நுகர்வோர்களையும், விவசாயிகளையும் நேரடியாக இணைக்கக்கூடிய மக்கள் சேவைத் திட்டமான பண்ணைப் பசுமை நுகர்வோர் கடைகள் திட்டத்தின்கீழ் தஞ்சாவூர் மாவட்டம் – தஞ்சாவூர், வேலூர் மாவட்டம் – காந்திநகர், திருச்சிராப்பள்ளி மாவட்டம் – சீனிவாசா நகர், சுப்பிரமணியபுரம், புத்தூர், கல்லுக்குழி, ஸ்ரீரங்கம், அய்யப்ப நகர் மற்றும் திருவானைக்காவல், திருப்பூர் மாவட்டம் – திருப்பூர், சேலம் மாவட்டம் – சேலம், ஈரோடு மாவட்டம் – ஈரோடு மற்றும் திருநெல்வேலி மாவட்டம் – திருநெல்வேலி ஆகிய இடங்களில் 41 லட்சத்து 81 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள 13 பண்ணைப்பசுமை நுகர்வோர் கடைகள்;

அனைத்து தரப்பு மக்களும் தரமான மருந்துகளை 15 சதவீதம் வரை தள்ளுபடி விலையில் பெற்று பயனடையும் அம்மா மருந்தகம் திட்டத்தின் கீழ் காஞ்சிபுரம் மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் 59 லட்சத்து 28 ஆயிரம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள குளிர்சாதன வசதிகளுடன் கூடிய 6 அம்மா மருந்தகங்கள்;

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தால் வெளிச்சந்தை விலையை கட்டுப்படுத்தும் நோக்கில் தமிழ்நாட்டில் 25 மாவட்டங்களில் 7 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள 54 அம்மா அமுதம் பல்பொருள் அங்காடிகள்;

இராமநாதபுரம், தூத்துக்குடி, சிவகங்கை, திருச்சிராப்பள்ளி, கரூர் மற்றும் புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் 40 ஆயிரம் மெட்ரிக் டன் கொள்ளளவில் 32 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 12 தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக சேமிப்பு கிடங்குகள்; என மொத்தம் 87 கோடியே 41 லட்சத்து 79 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை சார்பில் கட்டப்பட்டுள்ள 292 கட்டடங்கள், 6 அம்மா மருந்தகங்கள், 54 அம்மா அமுதம் பல்பொருள் அங்காடிகள் மற்றும் 13 பண்ணை பசுமை நுகர்வோர் கடைகளை முதலமைச்சர் ஜெயலலிதா திறந்து வைத்தார்.

கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் செயல்படுத்தப்படும் பல்வேறு அரசுத் திட்டங்கள் பற்றிய விழிப்புணர்வை சங்க உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்களிடையே ஏற்படுத்தும் வகையில் மதுரை, புதுக்கோட்டை, பெரம்பலூர் மற்றும் கடலூர் மாவட்ட கூட்டுறவு ஒன்றியங்களுக்கு 27 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் செலவில் வாங்கப்பட்ட 4 புதிய விளம்பரம் மற்றும் பிரச்சார வாகனங்கள்; நவீன தொழில்நுட்பங்களுடன் வாடிக்கையாளர்கள் தங்கள் வணிக பணிகளை சிரமமின்றி துரிதமாக மேற்கொள்ளும் வகையில் தமிழ்நாடு மாநிலத் தலைமைக் கூட்டுறவு வங்கியில் 43 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான கைப்பேசி வங்கியியல் சேவை ஆகியவற்றை முதலமைச்சர் ஜெயலலிதா துவக்கி வைத்தார்.

முதலமைச்சர் ஜெயலலிதா, கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் சார்பில் திறந்தும், துவக்கியும் வைத்த திட்டங்களின் மொத்த மதிப்பு 88 கோடியே 11 லட்சத்து 99 ஆயிரம் ரூபாய் ஆகும்.

இந்த நிகழ்ச்சியில், கூட்டுறவுத் துறை அமைச்சர் திரு. செல்லூர் கே. ராஜூ, உணவுத் துறை அமைச்சர் திரு. ஆர். காமராஜ், தலைமைச் செயலாளர் திரு. கு. ஞானதேசிகன், தமிழ்நாடு அரசு ஆலோசகர் திருமதி ஷீலா பாலகிருஷ்ணன், கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை முதன்மைச் செயலாளர் திரு.சிவ்தாஸ் மீனா, உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை ஆணையர் திரு.சூ. கோபாலகிருஷ்ணன், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் நிர்வாக இயக்குநர் திரு.கா. பாலச்சந்திரன், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் திருமதி ஜெயஸ்ரீ முரளீதரன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.