68-வது வண்ணமிகு குடியரசு தின விழாவில் முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் தேசியக்கொடியை ஏற்றினார்

68-வது வண்ணமிகு குடியரசு தின விழாவில் முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் தேசியக்கொடியை ஏற்றினார்

வியாழன், ஜனவரி 26, 2017,

சென்னை ; 68-வது குடியரசு தினத்தை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரை காந்தி சிலை அருகே நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தேசியக்கொடி ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினார்.

நாட்டின் 68-வது குடியரசு தின விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.தமிழகத்தில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தேசியக் கொடியை ஏற்றினார். கடற்கரை சாலையில் உள்ள போர் நினைவு சின்னத்துக்குச் சென்று மலர்வளையம் வைத்து, போரில் மறைந்த வீரர்களுக்கு மரியாதை செலுத்திய முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் விழா நடைபெற்ற காந்தி சிலை அருகே காலை 7.54 மணிக்கு வருகை தந்தார். அப்போது அவரை தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் மலர்க்கொத்து கொடுத்து வரவேற்றார்.இதைத் தொடர்ந்து, முதல்வர் தேசியக் கொடியை ஏற்றிவைத்தபோது, இந்திய விமானப் படையின் ஹெலிகாப்டர் வானில் இருந்து பறந்தபடியே மலர்களைத் தூவியது.இதன்பின்னர், தேசியகீதம் இசைக்கப்பட்டது.

பின்னர் முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையை முதல்வர் ஏற்றுக்கொண்டார். முப்படை அணிவகுப்பைத் தொடர்ந்து முப்படையினரின் பீரங்கி, சிறிய போர் விமானங்கள் மற்றும் ஆயுதங்கள் போன்றவை ஊர்திகள் அணிவகுப்பு நடைபெற்றது. தமிழக போலீஸ் பிரிவுகளின் அணிவகுப்பு, தமிழக அரசின் பல்வேறு துறைகளின் சாதனைகள் மற்றும் மக்கள் நலத்திட்டங்களை விளக்கும் அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு நடைபெற்றது. பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளின் கண்கவர் கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

தமிழக முதல்வர்கள் எவருக்கும் கிடைக்காத பெருமை முதல்வர் ஒ.பன்னீர்செல்வத்திற்கு கிடைத்திருக்கிறது. சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினம் ஆகிய நாட்களில் கவர்னர்கள் தான்  கொடியேற்றுவது வழக்கமாக இருந்து வந்தது. 1974-ம் ஆண்டு முதல் சுதந்திர தினத்தன்று மாநிலங்களின் முதல்வர்களும் குடியரசு தினத்தன்று கவர்னரும் கொடியேற்றும் நடைமுறை உருவானது. தற்போது தமிழகத்தின் பொறுப்பு கவர்னராக  இருக்கும் வித்யாசகர் ராவ். மகாராஷ்டிரா மாநிலத்தின்  முழுநேர கவர்னர் என்பதால் அம்மாநிலத்தில் நடைபெறும் குடியரசு தினவிழாவில் கலந்து கொண்டார். இதனால் தமிழகத்தில் நடைபெற்ற குடியரசு தினவிழாவில்  முதன்முறையாக முதல்வர் ஒருவர் தேசியக் கொடியை ஏற்றி வைக்கும் பெருமை அவருக்கு கிடைத்துள்ளது.