96 தமிழக மீனவர்களை உடனடியாக விடுவிக்க தூதரகம் வாயிலாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் : முதலமைச்சர் ஜெயலலிதா பிரதமருக்கு கடிதம்

96 தமிழக மீனவர்களை உடனடியாக விடுவிக்க தூதரகம் வாயிலாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் :  முதலமைச்சர் ஜெயலலிதா பிரதமருக்கு கடிதம்

செவ்வாய், மார்ச் 15,2016,

இலங்கை கடற்படையால் பிடித்துச் செல்லப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 28 பேர் உட்பட இலங்கை சிறைகளில் உள்ள 96 தமிழக மீனவர்களை உடனடியாக விடுவிக்க பிரதமர் தூதரகம் வாயிலாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி முதலமைச்சர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.

இது குறித்து முதலமைச்சர் ஜெயலலிதா, பிரதமர் நரேந்திர மோடிக்குஎழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:- ராமேஸ்வரத்தை சேர்ந்த 28 மீனவர்களையும், அவர்களுக்கு சொந்தமான 4 மீன்பிடிப் படகுகளையும் இலங்கை கடற்படையினர் பிடித்துச் சென்றுள்ள அண்மைச் சம்பவம் குறித்து மிகுந்த மனவேதனையுடன் இக்கடிதத்தை எழுதுகிறேன். இதுபோன்று தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டு, காவலில் வைக்கப்படும் சம்பவங்கள் தொடர்பாக இந்திய அரசு உரிய, போதுமான நடவடிக்கை எடுக்காததால், இலங்கை கடற்படையினர் துணிச்சல் பெற்று தங்கள் பாரம்பரிய பாக் நீரிணைப் பகுதியில் மீன்பிடிக்கும் தமிழக மீனவர்களை துன்புறுத்தி வருகிறார்கள்.

முதலாவது சம்பவத்தில், ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் மீன்பிடி தளத்திலிருந்து இயந்திரப் படகு ஒன்றில் மீன்பிடிக்கச் சென்ற 5 மீனவர்கள், இலங்கை கடற்படையினரால் நேற்று முன்தினம் அதிகாலை கைது செய்யப்பட்டு, இலங்கையில் உள்ள காங்கேசன் துறைக்கு கொண்டு செல்லப்பட்டனர். மற்றொரு சம்பவத்தில் ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் மீன்பிடி தளத்திலிருந்து 3 மோட்டார் பொருத்திய நாட்டுப் படகுகளில் சென்ற 23 மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் கடந்த 12-ம் தேதி இரவில் கைது செய்யப்பட்டு, இலங்கையில் உள்ள தலைமன்னாருக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

இதுபோன்ற செயல்கள் இனியும் நடக்கக்கூடாது என்றும், இலங்கை கடற்படையினரால் பிடித்துச் செல்லப்பட்டு அந்நாட்டு சிறையில் உள்ள தமிழக மீனவர்களையும், அவர்களது படகுகளையும் உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும், இதற்காக தூதரகம் மூலமாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், நான் தொடர்ந்து தங்களுக்கு, கடிதம் எழுதி வருகிறேன். நேற்று முன்தினம் பிடித்துச் செல்லப்பட்ட 4 மீன்பிடி படகுகள் உட்பட இலங்கையில் தற்போது தமிழக மீனவர்களுக்குச் சொந்தமான 82 படகுகள் பராமரிப்பின்றி சேதமடைந்து வருகின்றன. நீண்டகாலமாக பிடித்து வைத்திருப்பதாலும், பயன்படுத்தப்படாமல் உள்ளதாலும், கடுமையான பருவநிலை காரணமாகவும் இந்தப் படகுகள் சீரமைக்க முடியாத அளவுக்கு சேதமடைந்துவிட்டன. எனவே, இந்தப் படகுகளையும், மீன்பிடி உபகரணங்களையும் புதுப்பித்து விரைவில் தமிழக மீனவர்களிடம் மீண்டும் ஒப்படைக்க வேண்டும்.

தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் தொடர்ந்து கைது செய்யப்படுவதும், சிறை வைக்கப்படுவதும் தமிழக மீனவ சமுதாயத்தினரிடையே விரக்தி மற்றும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. பாக் நீரிணை பாரம்பரிய மீன்பிடி கடற்பகுதியில் தமிழக மீனவர்கள் காலம் காலமாக மீன்பிடிக்கும் உரிமை பெற்றுள்ளனர். அந்த உரிமை இலங்கை அரசால் அடிக்கடி மீறப்பட்டு வருகிறது. மீனவர்கள் சந்தித்து வரும் இந்த சிக்கலான பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண ஒரேவழி இந்தியாவின் இறையாண்மைக்குட்பட்ட கச்சத்தீவை மீண்டும் பெறுவதுதான் என்ற நிலைப்பாட்டை தமிழ்நாடு அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இதன்மூலம் தமிழக மீனவர்களுக்கு தங்கள் பாரம்பரிய கடற்பகுதியில் மீன்பிடிக்கும் உரிமையை மீண்டும் பெற்றுத் தரமுடியும். இந்தியா-இலங்கை இடையேயான சர்வதேச கடல் எல்லை என்பது, தற்போது உச்சநீதிமன்றத்தின் விசாரணையின்கீழ் நிலுவையில் உள்ளது. 1974 மற்றும் 1976-ம் ஆண்டுகளில் இந்தியா-இலங்கை இடையே ஏற்பட்ட உடன்பாடுகளின் அரசியல் சாசன செல்லத்தக்கத் தன்மையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுப்பது தொடர்பாக தங்களின் தலைமையின்கீழ், தற்போது இந்திய அரசின் நிலைப்பாட்டில் முக்கிய மாற்றம் ஏற்படும் என நான் நம்புகிறேன். நீண்டகாலமாக இருந்து வரும் மிகவும் உணர்வுபூர்வமான, தமிழகத்தின் பாதுகாப்புக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தும் இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண இந்திய அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இலங்கை கடற்படையின் அராஜக நடவடிக்கைகளை கடுமையாக கண்டிக்கும் வகையில், தூதரகம் மூலமாக தீர்க்கமான மற்றும் கடுமையான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என தங்களை கேட்டுக்கொள்கிறேன், மேலும் தாங்கள், இப்பிரச்னையில் தலையிட்டு, நேற்று முன்தினம் பிடித்துச் செல்லப்பட்ட 28 ராமேஸ்வர மீனவர்கள் மற்றும் 4 மீன்பிடி படகுகள் உட்பட 96 தமிழக மீனவர்களையும், 82 மீன்பிடி படகுகளையும் உடனடியாக மீட்க வெளியுறவு அமைச்சகத்தைச் சேர்ந்த, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தாங்கள் உத்தரவிட வேண்டும். இவ்வாறு பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.